`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தை வெளியிடும் தேதி தள்ளிப் போயுள்ளதால் விரக்தியில் உள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
மலையாளத்தில், கடந்த 2015-ம் ஆண்டு, இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்தத் திரைப்படம், 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இதில், மம்முட்டியும் நயன்தாராவும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் சித்திக். தமிழ் வெர்ஷனில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த ஸ்டிரைக் காரணமாக வெளியாகும் தேதி தள்ளிப் போனது. தற்போது, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இருந்தாலும், நிறைய படங்கள் ரிலீஸ் செய்யப்பட வேண்டிய சூழல் நிலவி வருவதால், பெரிய ஹீரோக்களின் படமே எப்போது திரைக்கு வரும் என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்நிலையில், `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மே 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து படத்தின் கதாநாயகன் அரவிந்த் சாமி, `மே 11-ம் தேதிதான் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் வெளிவருகிறது. பெரிய ரிலீஸுக்குத் தேவையான அளவு தியேட்டர்கள் இல்லாத நிலையில் வெளியாகும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.