சென்னையில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிரபல மியூசிக் சேனல் தொகுப்பாளினி அனிஷா உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல மியூசிக் சேனல் தொகுப்பாளினி அனிஷா. சின்னத்திரை நடிகையுமான அனிஷா நெசப்பாக்கம் அம்மன் நகரை சேர்ந்தவர். அனிஷா தனது கணவர் மற்றும் சகோதரனுடன் இணைந்து ஸ்கை எக்விப்மென்ட் என்ற பெயரில் மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில், மின்சாதனப் பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தனர்.
அந்த வகையில், கே.கே. நகர் பிரசாந்த் குமார் என்பவரிடம் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் 101 ஏசிக்களை தனது நிறுவனத்தில் விற்பனை செய்வதற்காக வாங்கினார். இதற்காக, பிரசாந்த் குமாரிடம் காசோலை வழங்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால், காசோலை பவுன்ஸ் ஆகிவுள்ளது.
இதுகுறித்து அனிஷாவிடம் பிரசாந்த் கேட்டபோது, பணத்தை திரும்ப தர முடியாது என்றும் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து, பிரசாந்த் கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் அனிஷா மற்றும் அவரது கணவர் சக்தி முருகன், சகோதரர் உள்ளிட்டோ மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, அனிஷா மற்றும் அவரது சகோதரரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அனிஷாவின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், ஸ்கை லக்சுரி என்ற டிராவல்ஸ் நிறுவனம் மூலம் ஆடி, பிஎம்டபுள்யு உள்ளிட்ட சொகுசு கார்களை வாடகைக்கு விடும் தொழிலையும் அனிஷா செய்து வந்துள்ளார். மேலும், சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் கார்களின் ஆவணங்களை அடகு வைத்து லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அனிஷாவின் கணவர் மீது சென்னையில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் மோசடி வழக்குகள் நிலுவகையில் உள்ளதாகவும் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.