பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜூ மறைவுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
பிரபல வில்லன் - குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு(68) மாரடைப்பு காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதி கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார் .அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் , பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றும் வேளையிலேயே கலை ஆர்வத்தால் நண்பர்களுடன் சேர்ந்து மும்பையில் நாடகக்குழு அமைத்து நாடகங்களில் நடித்து வந்தார்.
1980- ல் 'ரத்தம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார் . கடந்த 37 ஆண்டுகளில் ஐநூறுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். விக்ரம் கதாநாயகனாக நடித்த 'இதா ஒரு சினேக கதா ' என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார்.
மேலும் அணைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார் படங்களிலும் வில்லனாக நடித்தும் புகழ் பெற்றவர் . தர்மத்தின் தலைவன், சூரசம்ஹாரம், ஜீவா, என் ஜீவன் பாடுது, ராஜகுமாரன் ஆகியவை தமிழில் அவரது முக்கிய படங்களாகும் .என்றும் நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
அவரது இழப்பு தென்னிந்திய திரைத்துறைக்கு ஈடு கட்ட முடியாத/இயலாத மாபெரும் இழப்பாகும் .அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது உற்றார் உறவினர்கள் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.