ஆபாச காட்சிகள் அதிகரித்து வருவதால், வெப் தொடர்களுக்கு சென்சார் கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சினிமாக்களுக்கு தணிக்கை வழங்கப்படுவதை போல, வெப் தொடர்களுக்கும் தணிக்கை கேட்டு சமூக தொண்டு நி்றுவனம் ஒன்று மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. சினிமாவை விட தற்போது, இளைஞர்கள் வெப் தொடர்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என பல ஸ்ட்ரீமிங் தளங்களும், புது புது வெப் தொடர்களை, பெரிய பெரிய நட்சத்திரங்களை வைத்து உருவாக்கி வருகின்றனர். இவற்றுக்கு தணிக்கை கிடையாது என்பதால், ஆபாச வசனங்களும், நிர்வாண காட்சிகளும் நிறைந்து இளைஞர்களை எளிதில் கவரும் வண்ணம் இவை தயாரிக்கப்படுகின்றன.
நெட்பிளிக்ஸ் தொடர்களான சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரி போன்ற தொடர்களில், சைப் அலிகான், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி போன்ற பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதனால், உடனடியாக இதற்கும் தணிக்கை அவசியம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாதிகாரி, கிராட்கர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய தணிக்கை குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.