சர்ச்சைக்குரிய பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குடன் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அக்ஷய்குமாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேரா சச்சா சவுதா என்ற தனி மதத்தை உருவாக்கியவர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங். பலாத்கார வழக்கில் இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கு செல்வதற்கு முன்னதாக குர்மீத் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் சீக்கியர்களைப் போல உடை அணிந்திருந்தார்.
இதற்கு எதிராக பஞ்சாப் பற்றி எரிந்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணித்தார்.
இது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை அண்மையில் பஞ்சாப் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், முன்னாள் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலை அக்ஷய்குமார் தமது வீட்டுக்கு வரவழைத்து குர்மீத்தின் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அக்ஷய்குமாரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று நேற்று சண்டிகரில் சிறப்பு புலனாய்வு குழு முன்பாக ஆஜரான அக்ஷய்குமாரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.