ஆமீர்கானின் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் சீன பல்கலைக் கழகம் ஒன்று அனுமதி மறுத்துள்ளது.
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மற்றும் பாலிவுட் பிதாமகர் அமிதாப்பச்சன் ஆகிய இரு பெரும் ஜாம்பவான்கள் இணைந்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட தக்ஸ் ஆப் இந்துஸ்தான் இந்தி படம் தீபாவளியன்று இந்தியா முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை ஈட்டாத இந்த படம் படுதோல்வி அடைந்தது.
இந்த படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என தோல்விக்கு பொறுப்பேற்று நடிகர் ஆமீர்கான் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் அடுத்த வாரம் சீனாவில் வெளியாகிறது. ஆமீர்கானின் 3 இடியட்ஸ், தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படங்கள் சீனாவில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதால், அங்காவது படம் ஓடும் என்ற முனைப்பில் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
சீனாவின் குவாங்சோவில் உள்ள குவாங்டாங் பல்கலைக்கழகத்தில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் பங்கேற்பதற்காக ஆமீர்கானும் ஓட்டலில் இருந்து புறப்பட தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் விழா நடத்த பல்கலைக்கழகம் தடை விதித்தது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் அளித்த விளக்கத்தில், “படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி என்று எங்களுக்கு தெரியவில்லை. முறையான அனுமதி பெறாததால் விழாவுக்கு தடை விதித்தோம்” என்றனர். இதனால் நிகழ்ச்சியை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றினர். அங்கு அமீர்கான் கலந்துகொண்டு படத்தை விளம்பரப்படுத்தினார்.