இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர், ஓய்வுக்கு பின் தனது அடுத்தடுத்த பயணங்களுக்கு வித்திட்டு வருகிறார். ஓடிடி தொடர் மூலம் நடிப்பு உலகில் கால் பாதிக்கவுள்ள யுவராஜ், அவரின் சகோதரரை வைத்து சினிமா தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதனால் இவர் அடுத்து திரை உலகில் பரிணமிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதி வேண்டும் என சமீபத்தில் பிசிசிஐயிடம் அனுமதி கேட்டிருந்தார் யுவராஜ். இதனால் அடுத்து இவர் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிஸினெஸ்மேனாக உருவெடுக்க இருக்கிறார் யுவராஜ் சிங். ஊட்டச்சத்து துறையில் வளர்ந்து வரும் நிறுவனம் வெல்வெர்செட். கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட இந்த நிறுவனம், டையட், வீகன், நீரிழிவு, உயர் புரதம், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவைக்கான ஊட்டச்சத்து திட்டங்களையும், எடை இழப்பு, தோல் ஆரோக்கியம், முடி பராமரிப்பு மற்றும் பாலியல் ஆரோக்கியத்திற்கான 12,000 க்கும் மேற்பட்ட சுகாதார மாற்ற திட்டங்களையும் உருவாக்கி அதனை சாதித்தும் காட்டி வருகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய இருக்கிறார் யுவராஜ் சிங். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள யுவராஜ், ``வளர்ந்து வரும் இந்தக் குழுவின் ஆற்றல், ஆர்வம், ஆழ்ந்த நிபுணத்துவம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. வெல்வெர்செட் ஊட்டச்சத்து ப்ரேண்டுகள் விரைவில் உலகில் சிறந்த ப்ரேண்டுகளில் ஒன்றாக மாறும்" எனக் கூறியுள்ளார். இந்நிறுவனத்தில் ரூ.100 கோடி முதலீடு செய்ய இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.