அடிலெய்டில் கொரோனா பரவல் ஆஸ்திரேலிய வீரர்கள் தனிமையில் சென்றனர் முதல் டெஸ்ட் போட்டி நடக்குமா?

by Nishanth, Nov 16, 2020, 17:07 PM IST

அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் உட்பட சில வீரர்கள் சுய தனிமைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அடுத்த மாதம் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்க உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. அந்த அணியுடன் 4 டெஸ்ட் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் வரும் 27 ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த பின்னர் டிசம்பர் 17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவலில் தொடங்குகிறது.

இந்நிலையில் அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தலைமையிலான சில வீரர்கள் அடிலெய்டில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இந்தப் போட்டியில் டாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா ஆகிய அணிகள் கலந்து கொண்டன. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் உள்பட இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரும் 14 நாள் சுய தனிமைக்கு செல்ல வேண்டும் என ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கடந்த 7 நாட்களில் டாஸ்மானியாவுக்கு பயணம் செய்த அனைவரும் சுய தனிமைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடிலெய்டில் நடந்த போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாவது ஆஸ்திரேலிய வீரர்கள் அங்கு செல்ல வேண்டும். முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள அடிலெய்டு பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போட்டியை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

You'r reading அடிலெய்டில் கொரோனா பரவல் ஆஸ்திரேலிய வீரர்கள் தனிமையில் சென்றனர் முதல் டெஸ்ட் போட்டி நடக்குமா? Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை