சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் வார்னர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறினர். கேப்டன் பின்ச் (114) அதிரடியாக விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்துக்கொண்டிருந்த ஸ்மித்தும் (105) தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை விளாசி அசத்தியது. 375 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணியை 308/8 ரன்களில் சுருட்டினர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்.
இதற்கிடையே, இந்தப் போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், ``கடந்த சில மாதங்களாக டி20 விளையாடி வருகிறோம். நீண்ட நாள்களுக்கு பின் முழு ஒரு நாள் போட்டியில் இன்று தான் விளையாடி இருக்கிறோம்" என்று பேசியிருந்தார். இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடனான அனைத்து போட்டிகளில் தோல்வி அடையும் என முன்னாள் வீரர் ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
அவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்தான். ``கடந்த 9 மாதங்களில் இந்திய அணி முதல் இன்டர்நேஷனல் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. பௌலர்கள் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தனர். பீல்டிங்கில் சொதப்பினர். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். ஆனால், பேட்ஸ்மேன்களால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. இந்திய அணி வீரர்களால் ஓரணியாக திரள முடியவில்லை. தற்போது, இந்திய கிரிக்கெட் அணி பழைய பள்ளிக்கூடம் போல் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கான இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் அனைத்திலும் இந்திய அணி தோல்வி அடையும் என நான் நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.