கொரோனா ஊரடங்கு கால கட்டம் திரையுலகை நிலை குலைய வைத்துள்ளது. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூட்டப்பட்டிருந்தன. திரை அரங்கு உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதற்கிடையில் வி எப் எக்ஸ் கட்டணம் தொடர்பாக தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. வி எப் எக்ஸ் கட்டணம் ரத்து செய்தால் தான் புதிய படங்களை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
இதனால் தீபாவளிக்கு பெரிய அளவில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில் தியேட்டர் அதிபர்கள் கியூப் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய படங்கள் ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. மாஸ்டர், தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் முடிவடைந்தும் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி இருக்கிறது . அதற்குக் காரணம் தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்று கொரோனா வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
100 சதவீத டிக்கெட் அனுமதிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கோரி வருகின்றனர். ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை. பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆனால் தான் தியேட்டருக்கு கூட்டம் வரும் என்று தியேட்டர் அதிபர்கள் எண்ணி உள்ளனர். விஜய்யின் மாஸ்டர். தனுஷின் ஜெகமே தந்திரம் தியேட்டர் முழு அளவில் செயல்படும் போது வெளியிடப்படும் என்று அப்படங்களின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். மாஸ்டர் படம் ஒடிடி யில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்ததை அவ்வப்போது அப்பட நிறுவனம் மறுத்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.
இது தியேட்டர் அதிபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்துக்கு விற்கப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யவில்லை. பொங்கல் தினத்தில் இப்படம் ஒடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.