பாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா

by SAM ASIR, Dec 2, 2020, 20:55 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை கண்ட இந்திய அணி, மீண்டும் எழுச்சி பெற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. கான்பெராவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக சுப்மென் ஹில் சேர்க்கப்பட்டிருந்தார். சுழற்பந்து வீச்சாளர் சஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும், சைனிக்கு பதிலாக நடராஜனும் சேர்க்கப்பட்டிருந்தனர். முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் வேகப் பந்து வீச்சுக்கு சேர்க்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி முதல் முப்பது ஓவர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. கேப்டன் கோலி மட்டும் 63 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் விளையாட வந்த ஹர்திக் பாண்ட்யாவும் ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணி கௌரவமான ஸ்கோரை பெற உதவினர். 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ் அடித்து, 92 ரன்களை குவித்தார் பாண்ட்யா. ஜடேஜா 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸ்களும் விளாசினார். மொத்தத்தில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 302 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் இல்லாதது பெரிய இழப்பாக இருந்தது.

முதலாவது சர்வதேச போட்டியில் ஆடிய தமிழ்நாட்டின் நடராஜன் தன் முதல் விக்கெட்டாக லபுசேனை வீழ்த்தினார். வார்னர் இல்லாததால் தொடக்க ஆட்டக்காரராக வந்த லவுசேன் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். முந்தைய ஆட்டங்களில் ரன்களை விளாசிய ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஹென்ரிக்ஸ் 22, கேப்டன் ஃபின்ச் 75 ரன்களை எடுத்தனர். ஆபத்தான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 38 பந்துகளில் 59 ரன்களை விளாசினார். ஷர்துல் தாகூர் 3 விக்கெட், பும்ரா 2 விக்கெட், நடராஜன் 2 விக்கெட், குல்துப், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தொடரை இழந்தாலும் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோலி, ஒருநாள் போட்டிகளில் விரைவாக 12,000 ரன்களை கடந்து சாதனை செய்தார். 242 இன்னிங்ஸ்களில் அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார். 17 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த தெண்டுல்கரின் சாதனையை கோலி தாண்டி சென்றுள்ளார். தெண்டுல்கர் 300 இன்னிங்ஸில்தான் 12,000 ரன்களை கடந்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை கடந்த வீரர்கள் வரிசையில் கோலி ஆறாவது இடத்தை பெற்றுள்ளார். தெண்டுல்கரை தவிர, ரிக்கி பாண்டிங், சங்ககாரா, ஜெயசூர்யா மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோர் 12,000 ரன்களை கடந்துள்ளனர்.

You'r reading பாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை