இந்திய அணிக்காகத் தனது முதல் ஒரு நாள் போட்டியை இன்று விளையாடிய சின்னப்பம்பட்டி இளைஞர் நடராஜன். மூத்த வீரரான ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், அவருக்குப் பதில் நடராஜன் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் முன்னிலையில் 232வது வீரராகச் சேர்க்கப்பட்டார். தமிழகத்திலிருந்து இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாவது வீரர் நடராஜன். 2002 ல் தமிழகத்தில் இருந்து முதன் முதலில் பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லட்சுமிபதி பாலாஜி. இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மேலும் கடந்த 6 போட்டிகளில் பவர் பிளேயில் இந்திய அணி விக்கெட் வீழ்த்தாத நிலையில் இன்று அதற்கு முடிவுகட்டி நடராஜன், பவர் பிளேயில் விக்கெட் எடுத்தார்.
முதல் போட்டியில் முதல் விக்கெட்டாக, லபுசேனை தூக்கி தனது இன்டர்நெஷனல் கேரியரை கெத்தாக துவங்கியுள்ளார் நடராஜன். அவருக்கு வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இதற்கிடையே, இந்திய அணியில் விளையாடியது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், ``இந்தியாவுக்காக விளையாடியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி; மேலும் சவால்களை எதிர்நோக்கியுள்ளேன்" என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.