தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நெட் பௌலராக சென்ற நிலையில் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போக. அவரின் இடம் நடராஜனுக்கு வந்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார் நடராஜன். கடைசி ஒருநாள் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
தனது முதல் சர்வதேச டி20 போட்டியிலும், நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் என முத்திரை பதித்தார். இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பெர்பாமென்ஸை வெளிப்படுத்தினார் நடராஜன். இதனால் அவரை தமிழகமே கொண்டாடி வருகிறது. தமிழகத்தை தாண்டியும் கொண்டாடப்பட்டு வருகிறார் நடராஜன்.
ஹர்திக் பாண்டியா, தனது டுவிட்டர் பக்கத்தில், ``இந்திய அணியில் உனது தொடக்கம் உனது கடின உழைப்பையும், திறமையும் பேசும். தொடர் நாயகன் விருது பெற தகுதியான ஆள் நீதான்'' என்று கூறி விருதை நடராஜனுக்கு கொடுத்து அதன் புகைப்படத்தையும் பகிர்ந்தார். இதேபோல் தற்போது நடராஜனை ஆஸ்திரேலிய வீரரும், சன் ரைஸர்ஸ் அணியின் கேப்டனுமான வார்னர் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
அவர் பகிர்ந்துள்ளதில், ``தோல்வி, வெற்றியைத் தாண்டி நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும் வெளியிலும் மதிக்கிறோம். நாங்கள் தொடரை இழந்தாலும், நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. மிகவும் தன்மையான மனிதர் நடராஜன். ஒரு நெட் பௌலராக தொடருக்குள் வந்து அடுத்தடுத்து ஒருநாள், டி20 அணிகளில் இந்திய அணிக்காக ஆடியிருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை" என புகழ்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.