ஐசிசி அணியில் பாக். வீரர்களை ஏன் சேர்க்கவில்லை? இது ஒரு ஐபிஎல் அணி சோயப் அக்தர் கடும் கண்டனம்

by Nishanth, Dec 28, 2020, 19:43 PM IST

ஐசிசி அறிவித்த அணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறாததற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு ஐபிஎல் அணி என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐசிசி சமீபத்தில் கடந்த 10 ஆண்டில் சிறந்த வீரர்கள் அடங்கிய டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது. இந்த மூன்று அணிகளிலும் இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த மூன்று அணிகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கு கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இது பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 அணியில் விராட் கோஹ்லி, பும்ரா மற்றும் ரோகித் சர்மா ஆகிய 3 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் அணியில் ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் கோஹ்லி மற்றும் அஷ்வின் ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் மூன்று அணிகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறாததற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: ஐசிசி அறிவித்துள்ள அணியில் எனக்கு சுத்தமாக திருப்தி கிடையாது.

டி20 தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள பேட்ஸ்மேன் பாபர் ஆசம் அணியில் சேர்க்கப்படாதது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு உறுப்பினர் நாடு என்பதை மறந்து விட்டார்கள் என கருதுகிறேன். ஐசிசி ஒரு ஐபிஎல் அணியின் பட்டியலைத் தான் வெளியிட்டுள்ளது. இது ஒரு உலக கிரிக்கெட் அணி அல்ல. பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர் என்பதையும், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது என்பதையும் ஐசிசி மறந்துவிட்டது என கருதுகிறேன். அணியில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இடம்பெறாதது கண்டிக்கத்தக்கது. ஐசிசி கிரிக்கெட்டை வியாபாரமாக்குகிறது இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ஐசிசி அணியில் பாக். வீரர்களை ஏன் சேர்க்கவில்லை? இது ஒரு ஐபிஎல் அணி சோயப் அக்தர் கடும் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை