ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றி பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. தொடரை வென்ற பின்னர் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே, உடனடியாக அந்த கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணி இன்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கிடைத்த வெற்றியின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. அதுவும் பல முக்கிய வீரர்கள் யாருமே இல்லாத நிலையில் இளம் ரத்தங்கள் சேர்ந்து இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்ததால் யாருமே எதிர்பாராத வகையில் சில புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்தனர். வேறு வழியே இல்லாமல் தான் இவர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக மட்டும் அணியில் சேர்க்கப்பட்ட இளம் வீரர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.
அதிலும் குறிப்பாக நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று அணியிலும் அரங்கேற்றம் குறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தொடரில் மூன்று அணியிலும் ஒரு வீரர் அரங்கேற்றமாவது மிகவும் அபூர்வமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஸ்பேன் டெஸ்டில் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருமே அரங்கேற்றம் நடத்தினர். இவர்கள் இருவருமே மிகச் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் முதல் இன்னிங்சில் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடி 62 ரன்கள் எடுத்தார் என்பது அதைவிட குறிப்பிடத்தக்க விஷயமாகும். 2வது இன்னிங்சிலும் இவர் சிறப்பாக ஆடி ரிஷப் பந்துடன் சேர்ந்து மிக முக்கியமான 53 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் 11 வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இந்திய கேப்டன் ரகானேவின் செயல் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பையை பெற்றவுடன் அவர் நடராஜனை அழைத்து அந்த கோப்பையை கொடுத்தார். இதை நடராஜன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோப்பையை மிகவும் அதிசயத்துடன் வாங்கி அதை பார்த்தார். மேலும் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் லியோனுக்கு இது 100வது போட்டியாகும். கோப்பையை பெறுவதற்கு முன் இந்திய அணியின் பரிசாக, தான் கையெழுத்து போட்ட இந்திய அணியின் ஜெர்சியை லியோனுக்கு ரகானே பரிசளித்தார். ரகானேவின் இந்த செயலை முன்னாள் இந்திய விவிஎஸ் லட்சுமணன் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் இதுவும் வைரலாக பரவி வருகிறது.