Thursday, Mar 4, 2021

200 விக்கெட் எடுக்கும் ரெக்கார்டு போதும்.. மனம் திறந்த அஸ்வின்!

by Sasitharan Jan 26, 2021, 19:56 PM IST

சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் மற்றும் விஹாரியுடன் கூட்டணியின் காரணமாக போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம், பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றது என்று சொல்லலாம். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பியப்பின் அஸ்வின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும், ஸ்பின்னர் இடத்துக்கு யாருடனாவது போட்டி போட்டுக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இதுதான் என்னுடைய பெஸ்ட் என எந்த சீரிஸையும் நான் எப்போதும் கூறியதில்லை. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கான வாய்ப்புகள் வரலாம் என்றார்.

அடிலெய்டு நடந்த முதல் டெஸ்ட்டில் கூட ஜடேஜா காயமடைந்ததன் காரணமாகத்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒப்பீட்டளவில் பார்த்தால் கடந்த 3 வருடங்களில் இது என்னுடைய சிறந்த பெர்ஃபார்மென்ஸ்களில் ஒன்றாக இருக்கலாம். கடந்த 2016 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்தே என்னுடைய பேட்டிங் திறனின் மீது பலத்த கேள்வி எழுந்து வருகிறது. நாதன் லயனுடன் என்னை ஒப்பிட்டு தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கடந்த சீரிஸில் அடிலெய்டில் 6 விக்கெட்டை வீழ்த்திவிட்டு காயம் காரணமாக வெளியேறியிருப்பேன். அப்போதும் கூட லயனுடன் ஒப்பிட்டு என்னை விமர்சித்தார்கள்.

அதற்காக நானும் அதையே செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் குறைந்தது 8 மணி நேரமாவது அந்தப் போட்டியின் வீடியோக்களை பார்த்துவிட்டுதான் அடுத்த போட்டிக்கு தேவையான திட்டங்களை தீட்டுவேன். அடிலெய்டில் டிம் பெய்னின் பேட்டிங்கை பார்த்துதான் மெல்பர்னில் அவருக்கான திட்டத்தை தீட்டினேன்.

நாதன் லயனுடன் என்னை ஒப்பிட்டுக்கொள்வதை விட ஸ்மித்துடன் போட்டி போடவே நான் விரும்பினேன். ஆஸ்திரேலியா மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு ஒரு முறை கூட அவுட் ஆகாதவர் ஸ்மித். அதை நான் மாற்ற விரும்பினேன். இந்த சீரிஸின் சிறந்த வீரர்கள் கோலியும், ஸ்மித்தும்தான். கோலியுடன் நான் போட்டி போட முடியாது. அதனால்தான் ஸ்மித்துடன் போட்டி போட முடிவு செய்தேன். இந்த சீரிஸுக்கு முன்பாக ஸ்மித்தின் விக்கெட்டை யார் எடுப்பார்கள் என எல்லோரும் கணிப்புகளை வெளியிட்டிருந்தனர். அதில் எதிலுமே என் பெயர் இருக்காது. ஆனால், இப்போது அவர்களையும் கூட என்னைப்பற்றி பேச வைத்துவிட்டேன் என்றார்.

400 விக்கெட் மைல்கல் பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. 200 விக்கெட் எடுக்கும் வரைதான் ரெக்கார்டுகளை பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன் என்றார். ரஹானே கொஞ்சம் அமைதியானவர். கோலி அக்ரஸிவாக ரியாக்ட் செய்யக்கூடியவர். இவ்வளவுதான் இரண்டு பேருக்கும் இடையேயான வித்தியாசம். துணை கேப்டன் பதவி எனக்கு கிடைக்கவில்லை என வருத்தமெல்லாம் இல்லை. நான் பந்துவீசும் போது என்ன திட்டம், என்ன ஃபீல்ட் செட்டப் என்பதெல்லாம் நானே முடிவு செய்துகொள்ளும் அளவுக்கு எனக்கு சுதந்திரம் இருக்கிறது. எனவே துணை கேப்டன் பொறுப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

You'r reading 200 விக்கெட் எடுக்கும் ரெக்கார்டு போதும்.. மனம் திறந்த அஸ்வின்! Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cricket News

அதிகம் படித்தவை