டெல்லியில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக மணமக்கள் டிராக்டரில் குடை பிடித்து ஊர்வலமாக சென்ற காட்சி மக்களிடையே பெருமையாய் பேசப்பட்டு வருகிறது. டெல்லியில் 60 நாட்களாக கடும் பனியிலும் குளிரிலும் நடுங்கி முன் வைத்த காலை பின்வாங்காமல் விவசாயிகள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 11 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த செய்தியும் அறிவிக்கப்படவில்லை. சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாமல் நாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று விவசாயிகள் அழுத்தமாக கூறி வருகின்றனர்.
இதன் விளைவாக இன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடைபெற்றது. இன்று நடைபெற்ற கலவரத்தில் ஒரு விவசாயி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அருமனை கிராமத்தை சேர்ந்தவர் ஜெரின். இவர் கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்த பபிக்கும் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சியதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் இருவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் நடந்து முடிந்த கையோடு இருவரும் டிராக்டரில் அமர்ந்து ஊரு முழுவதும் ஊர்வலமாக சுற்றி வந்தனர். டிராக்டரில் வாழைப்பழம், வைக்கோல், பலாப்பழம் ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. இது குறித்து ஜெரின் கூறியதாவது:- டெல்லியில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு எங்களது திருமணம் சமர்ப்பணம் என்று நெகிழ்ச்சி ஊட்டும் விதமாக கூறியுள்ளார். இவர்களது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.