வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது அதிக நேரம் பேட் செய்ய வேண்டாம் என்றும் ராகுல் டிராவிட் அறிவுறுத்தியதாக ரகானே தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அளித்த அறிவுரை குறித்து ரகானே மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக ரகானே கூறுகையில், 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து நாங்கள் ஆஸ்திரேலியா பறக்க தயாராக இருந்தபோது ராகுல் அண்ணன் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, அறிவுரை அளித்த ராகுல் டிராவிட், முதல் போட்டிக்கு பிறகு நீங்கள் தான் அணியை வழிநடத்த உள்ளீர்கள். அணியை வழிநடத்தும்போது தேவையில்லாத அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். எதை நினைத்தும் வருந்த வேண்டாம். மனதளவில் திடமாக இருங்கள். வலைப்பயற்சியில் அதிக நேரம் பேட் செய்ய வேண்டாம். அணியை எப்படி வழிநடத்துவது, வீரர்களுக்கு எப்படி உத்வேகம் கொடுப்பது என்பதை மட்டும் திட்டமிடுங்கள். போட்டியின் முடிவுகள் குறித்து கவலை கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தியதாக ரகானே தெரிவித்தார்.
நட்சத்திர வீரர்கள் இல்லாதபோதும், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரகானே தலைமையிலான இந்திய அணி 2 - 1 என கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.