`குறைகூறாமல் தோல்வியை ஒப்புக்கொண்ட அந்த குணம் இருக்கே.. கோலியை பாராட்டிய யோகன் பிளேக்!

by Sasitharan, Feb 11, 2021, 19:09 PM IST

இந்திய அணி விராட் கோலியின் குணம் என்னைக் கவர்ந்தது என ஜமைக்கா தடகள வீரர் யோகன் பிளேக் பாராட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப்பின் பேட்டியளித்த கேப்டன் கோலி, சக வீரர்களை குறைகூறாமல் மோசமாக விளையாடியதை ஒப்புக்கொண்டார்.

விராட் கோலியின் இந்த பேட்டி குறித்து ஜமைக்கா நாட்டின் தடகள வீரர் யோகன் பிளேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இந்திய அணியை எனக்கு மிகவும் பிடிக்கக் காரணமே, தோல்விக்கு கேப்டன் கோலி எந்தவிதமான காரணமும் கூறாமல் ஏற்றுக்கொண்டதுதான், யாரையும் குறைகூறாமல், அனைத்தும் காரணம் எனக் கூறினார். கோலியின் தலைமையை இதனால்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு தோல்விக்குப்பின் உடனடியாக உற்சாகமாக எழும் கோலியின் கேப்டன் பொறுப்பு தான் எனக்குப் பிடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் உண்மையில் மிகச்சிறந்தது. ஏனென்றால், ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டில் இந்திய அணி தோற்றது. ஆனால், அதன்பின் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று அடுத்தடுத்து சிறப்பாகச் செயல்பட்டு தொடரை வென்றது. ஆதலால் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை காண ஆவலுடன் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்கள் ஷுப்மான் கில், ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாகப் பேட் செய்கிறார்கள். ரிஷப்பந்தின் பேட்டிங் அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப்பந்திடம் நாம் சிறந்த பேட்டிங்கை எதிர்பார்க்க முடியாது என்றாலும் சிறப்பாக விளையாடுகிறார். இதனால்தான் எனக்கு டெஸ்ட் போட்டி பிடிக்கிறது. ஆஸ்திரேலியாவில் புஜாராவின் அருமையான போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினார். எனக்கு பார்க்க மிகவும் பிடித்திருந்தது என்று மனம் திறந்து இந்திய அணியை பாராட்டியுள்ளார். தடகள வீரராக இருக்கும் யோகன் பிளேக் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading `குறைகூறாமல் தோல்வியை ஒப்புக்கொண்ட அந்த குணம் இருக்கே.. கோலியை பாராட்டிய யோகன் பிளேக்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை