மும்பை: நான் மதவாதி இல்லை என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் 31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் வாசிம் ஜாபர் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளர் இருந்து வந்தார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தனது பயிற்சியாளர் பதவியை வாசிம் ஜாபர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, வாசிம் ஜாபர் மீது உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் மஹிம் வர்மா பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக, உத்தராகண்ட் அணியில் வீரர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக குற்றச்சாட்டியிருந்தார். சங்க நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து வாசிம் ஜாபர் கூறுகையில், தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தனக்கு மிகுந்த மன வேதனையையும், வலியையும் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தகுதியும், திறனும் இல்லாத வீரர்களை பரிந்துரையின் பேரில் அணிக்குள் சேர்க்க வலியுறுத்தினர். இதனை நான் ஏற்கவில்லை. எனவே, தான் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் என்றார்.
பயிற்சிக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் வெள்ளி கிழமை நமாஸ் செய்தேன். நான் மதவாதி என்றால் பயிற்சியை தவிர்த்துவிட்டு நமாஸ் செய்திருப்பேன். ஆனால், அதை செய்யவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.