இன்று ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியா 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அக்சர் படேல் நேற்றைய அதே 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா வந்தவுடன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இந்த 2 விக்கெட்டுகளும் மோயின் அலிக்கு கிடைத்தது. ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இந்தியா நேற்று ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.
ரிஷப் பந்த் 33 ரன்களிலும் அக்சர் படேல் 5 ரன்களிலும் ஆடிக் கொண்டிருந்தனர். இன்று காலை ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. மோயின் அலி வீசிய 2வது ஓவரில் அக்சர் படேல் நேற்றைய அதே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ரிஷப் பந்துடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார். அவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அவர் ரன் ஏதும் எடுக்காமலேயே மோயின் அலியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மோயின் அலிக்கு ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கிடைத்தன. இதன்மூலம் இந்த இன்னிங்சில் அவருக்கு இதுவரை 4 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. இதன் பின்னர் ரிஷப் பந்துடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதிலும் ரிஷப் பந்த் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அதிரடியாக ஆடிய அவர், 65 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். 93 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.