தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானார். கன்னட படத்தில் நடித்த போது கன்னட நடிகர் சிரஞ் சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அப்போது மேக்னா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் மேக்னாவை நிலைகுலைய வைத்தது இருந்தாலும் குடும்பத்தினர், ரசிகர்கள் தந்த தைரியம் அவரை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைத்தது. கணவர் இறந்த சில மாதங்களுக்கு பிறகு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார் மேக்னா. சிரஞ்சீவி சார்ஜாவே மகனாக வந்து பிறந்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தை வளர்ப்பில் கவனமாக இருந்து வருகிறார் மேக்னா.
தற்போது வளர்ந்த நிலையில் உள்ள குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்யும்படி ரசிகர்கள் மேக்னாவிடம் கேட்டு வருகின்றனர். அதனை ஏற்று 14ம் தேதி (இன்று) குழந்தையின் போட்டோவை ஷேர் செய்வதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் சிரஞ்சீவி சார்ஜாவுடன் தான் இருக்கும் படங்களை பகிர்ந்ததுடன் தான் குழந்தையை தூக்கி கொஞ்சுவது போன்ற நிழல் உருவத்தை வெளியிட்டதுடன் வீடியோ முடிவில் குழந்தையின் மழலை குரலையும் பதிவு செய்திருந்தார். மற்றொரு தகவலில் 14ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு.. இது சிருவுக்கும் எனக்கும் பெருமை சேர்க்கும் தருணமாக இருக்கும். எங்கள் காதல் வாழ்க்கையின் அடையாளமான குழந்தையை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி. சிரஞ்சீவி சார்ஜாவின் குழந்தையை பார்க்க காலையிலேயே ரசிகர்கள் மேக்னாவின் இணைய வலைதள பக்கத்தில் குவிந்தனர். சொன்னபடி மேக்னா தந்து குழந்தையுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்தார். குழந்தை வீடியோவுடன் சிம்பா என பெயரும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நிமிடம் இடம் பெறும் வீடியோவில் சிரஞ்சீவி சார்ஜவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பிறகு மேக்னா குறிப்பிடும்போது, மருத்துவமையில் நான் இருக்கும்போது அடிக்கடி என்னை சிரஞ்சீவி அங்கிருக்கும் பால்கனி ஒன்றிற்கு அழைத்துச் சென்று குழந்தை பிறந்தவுடன் இந்த பால்கனியில் நின்றபடி என் குழந்தையை இந்த உலகுக்கு காட்டுவேன் என்பார். லைன்கிங் ஆங்கில படம் பார்க்கும்போதெல்லாம் இந்த காட்சி அப்படத்தில் இடம் பெறுவது கண்டு நான் கதறி அழுவேன். ஆனால் வாழ்கையில் நாம் நினைத்தபடியெல்லாம் நடந்துவிடாது என்றார்.