மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தொழிலாளி மீது மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் சிறுநீரை தெளித்த விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளி மீது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர், சிறுநீரை உடல் முழுவதும் தெளித்து அடித்து துன்புறுத்தியதாக கூறி, பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி அருகே, திருவண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லிமலை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான கொல்லி மலை செங்கல்சூளையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொல்லிமலை செங்கல்சூளை உள்ள வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், ராஜ்குமார், ராஜேஷ் ஆகியோர், அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து, சிறுநீரை உடல் முழுவதும் தெளித்து, அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த திருவண்டுதுறை கிராம மக்கள் அந்த மூன்று பேரையும் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களில் இரண்டு பேர் தப்பி விட்டதாக தகவல். இதற்கு போலீசார் தான் காரணம் என்று கூறி கோட்டூர் காவல் நிலையத்தை திருவண்டுதுறை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் திருச்சி – மன்னார்குடி சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி கண்டும் இந்த கால கட்டத்திலும், சாதி வெறி இன்னும் மறையாமல் இருப்பது பெரும் கவலைக்குரியது.