அமலாக்கப்பிரிவு வழக்கிலும் கைதாகிறார் ப.சிதம்பரம்? திகார் சிறையில் நாளை விசாரணை

Chidambaram to be questioned by ED tomorrow in Tihar, free to arrest him later

by எஸ். எம். கணபதி, Oct 15, 2019, 17:36 PM IST

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக நாளை(அக்.16) விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டிலும் ஜாமீன் மனு தள்ளுபடியானது. இதனால், இன்னும் திகார் சிறையில் இருக்கிறார்.

இதே ஐ.என்.எக்ஸ் மீடியா முதலீடு வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், திகார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் நாளை(அக்.16) அரை மணிநேரம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது.

மேலும், விசாரணைக்கு பின் அவரை இந்த வழக்கில் கைது செய்வதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, நாளை அவரிடம் விசாரணை நடத்திய பின்பு, அமலாக்கப்பிரிவு வழக்கிலும் அவர் கைதாகலாம். அப்படி கைதானால் சிபிஐ வழக்கு மட்டுமின்றி இ்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைக்கும் வரை திகார் சிறையிலேயேதான் சிதம்பரம் இருக்க வேண்டியிருக்கும்.

இதற்கிடையே, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கிலும் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தியை கைது செய்வதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினருக்கு டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது.

More Delhi News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை