சிதம்பரம், கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்

CBI files chargesheet against Chidambaram, son Karti in INX Media case

by எஸ். எம். கணபதி, Oct 18, 2019, 19:46 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் 12 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, சிதம்பரம் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இம்மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அக்.16ல் கைது செய்தனர். மேலும், கார்த்தி சிதம்பரம் கம்பெனிக்கு ஐ.என்.எக்ஸ் மீடியாவிடம் இருந்து ரூ.3 கோடி வந்தது தொடர்பாக விசாரிக்க வேண்டுமென்று கூறி, அவரை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், அவரை வரும் 24ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அனுமதி அளித்தது. மேலும், சிதம்பரத்திற்கு வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டுச் சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை செய்து தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் 12 பேர் மீது இன்று(அக்.18) டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹார் முன்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வரும் 21ம் தேதி நீதிபதி விசாரணை நடத்தவுள்ளார்.

ஒரு குற்ற வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், கைது செய்யப்பட்டவர்களுக்கு தானாகவே ஜாமீன் கிடைத்து விடும். இந்த 60 நாள் கெடுவை தாண்டி சிதம்பரத்தை சிறையில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக பழிவாங்கும் எண்ணத்துடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த பழிவாங்கும் அரசியலுக்கு அதிகாரிகள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

More Delhi News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை