சிதம்பரம், கார்த்தி வாங்கிய லஞ்சப் பணம் எவ்வளவு? சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

Indrani Mukerjee claims to have paid $5 million to Chidambaram, Karti in bribe.

by எஸ். எம். கணபதி, Oct 19, 2019, 09:08 AM IST

ஐ.என்.எக்ஸ் மீடியாவின் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்காக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் தரப்பட்டதாக இந்திரானி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது கடந்த 2017ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதே போல், இந்த முறைகேட்டில் சட்டவிரோத பணபரிமாற்றங்கள் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது.

சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரை அமலாக்கத் துறையினரும் கைது செய்தனர். தற்போது திகார் சிறையில் இருந்து அவர், அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சிதம்பரம் கைதாகி 48 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு(தற்போது 9 மீடியா நிறுவனம்) வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடுகள் வந்ததை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்தனர். இந்த முதலீடுகளுக்கு முறைப்படி மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை. இதன்பின், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம், ஐ.என்.எக்ஸ் மீடியாவின் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்தது.

இந்த அனுமதி வழங்கியதற்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் வரை லஞ்சமாக சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்திக்கும் அளித்ததாக ஐ.என்.எக்ஸ். மீடியாவை நடத்திய இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்துள்ளார். மொரிசீயஸ், பெர்முடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் இந்த பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றங்கள் மூலம்(லெட்டர் ரொகேட்டரி) தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் சிதம்பரம், கார்த்தி மற்றும் 10 பேர் மீதும், 4 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்படுகிறது. இவர்கள் மீது இ.பி.கோ. 120பி(கூட்டுச்சதி), 420(மோசடி), 468(போலி ஆவணம்), 471(உண்மையை மறைத்தல்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகள் 9, 13 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைகேட்டுக்கு உதவியதாக அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அலுவலர் அஜித்குமார் டங்டங், சார்பு செயலாளர் ரவீந்திரபிரசாத், சிறப்பு அலுவலர் பிரதீப்குமார், இயக்குனர் பிரபோத் சக்சேனா, நிதித்துறை இணைச் செயலாளர் அனுப் புஜாரி, கூடுதல் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லார், ஆடிட்டர் பாஸ்கரராமன், ஐ.என்.எக்ஸ். மீடியா பீட்டர்முகர்ஜி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதே போல், ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Delhi News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை