ஜனாதிபதி மாளிகை வாயிற்கதவு அருகே வைக்கப்பட்டிருந்த 22 குடிநீர் குழாய்கள் திருட்டு போனது. சி.சி.டி.வி. கேமரா மூலம் திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஜோர்பாக் பகுதியில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு புதிய குடிநீர் குழாய்களை பதிப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. அருண்ஜெயின் என்பவரின் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை எடுத்து பணிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், குழாய் பதிக்கும் பணிக்காக ஜனாதிபதி மாளிகையின் 23, 24வது கேட்களுக்கு 22 குடிநீர் குழாய்களை அந்த ஒப்பந்ததாரர் போட்டு வைத்திருந்தார். திடீரென அத்தனை குழாய்களும் காணாமல் போனது. இது குறித்து அருண் ஜெயின், சாணக்யபுரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
நீளமான குழாய்களை யார் திருடியது? அதுவும் பாதுகாப்பு மிகுந்த ஜனாதிபதி மாளிகை அருகேயே திருட்டு நடந்துள்ளதே என்று போலீசார் உடனடியாக விசாரணையை துவக்கினர். அந்த பகுதியில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களையும் பார்வையிட்டனர்.
இதில், 3 பேர் சேர்ந்து உபேர் காரில் வந்து குழாய்களை திருடியதும், அதை ஒரு டிரக்கில் போட்டு எடுத்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அசம்கார் பகுதியைச் சேர்ந்த அஜய்(31) என்பவர் முதலில் கைதானார். பின்னர், மிதிலேஷ், உபேர் டிரைவர் ராஜேஸ்திவாரி, கூட்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடர்கள் தாங்கள் திருடிய குழாய்களை மீரட்டில் விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.