டெல்லியில் பொம்மை மற்றும் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் நெரிசலான கட்டடங்கள் உள்ளன. இங்கு 4 மாடி கட்டடம் ஒன்றில்தான் நேற்று(டிச.8) அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் கீழ் தளத்தில் பிளாஸ்டிக் பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையும், முதல் மாடியில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையும், 2வது மாடியில் கார்மென்ட்ஸ் நிறுவனமும் செயல்பட்டு வந்தன. நேற்று அதிகாலை 5 மணியளவில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது மூன்றாவது மாடியில் திடீரென தீப்பற்றியது. அது சில நிமிடங்களில் அடுத்தடுத்த மாடிகளிலும் பரவியது. அப்போது ஏற்பட்ட புகைமூட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த பலரும் மூச்சு திணறி இறந்தனர். தகவல் கிடைத்து ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன. உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். 50 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டு லோக்நாயக் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளி் சேர்க்கப்பட்டனர்.
இது வரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிகாலை 5 மணிக்கு தீப்பிடித்துள்ளது. பலரும் புகைமூட்டத்தில் சிக்கி மூச்சுதிணறி இறந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்று தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டில் உபார் தியேட்டரில் பார்டர் என்ற இந்திப் படம் ஓடிக் கொண்டிருந்த போது, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் 59 பேர் இறந்தனர். அதே போல் மிகப் பெரிய தீ விபத்து தற்போது நடந்துள்ளது.