குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 18, 2019, 12:40 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான 60 மனுக்களின் விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், டெல்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணாமுல், மக்கள் நீதிமய்யம் கட்சி மற்றும் பலர் சார்பில் சுமார் 60 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மனுக்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மதரீதியாக நாட்டை பிளவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் சீனியர் வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வலியுறுத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடினார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். பின்னர், வழக்கு விசாரணை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

READ MORE ABOUT :

Leave a reply