டெல்லியில் 144 தடையுத்தரவு மொபைல், மெட்ரோ ரயில் கட்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது..

by எஸ். எம். கணபதி, Dec 19, 2019, 13:24 PM IST

டெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 60 சமூக செயல்பாட்டு அமைப்புகள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்துகின்றன. க்ஷ
டெல்லியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று காலை 11.30 மணி்க்கு செங்கோட்டை முதல் சாகித் பார்க் வரை பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தன. அதே போல், நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. டெல்லியில் மாண்டி ஹவுஸ் முதல் ஜந்தர்மந்தர் வரை கம்யூனிஸ்ட்களின் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, டெல்லியில் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கும் 144 தடையுத்தரவை காவல்துறை பிறப்பித்திருந்தது. ஆனாலும், டெல்லி செங்கோட்டை பகுதியில் காலை 11 மணியில் இருந்து போராட்டக்காரர்கள் திரண்டனர். அங்கு முன்கூட்டியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். தடுப்புகளை வைத்து பேரணி செல்ல விடாமல் தடுத்தனர். ஆனாலும், நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அதே சமயம், ஜந்தர்மந்தர் உள்ளிட்ட வேறு சில பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் குவிந்தனர். இதனால், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல்துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. டெல்லிக்கு ஹரியானா, உ.பி. உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வருவதால், டெல்லியை சுற்றி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்பின்னர், படேல் சவுக், லோக் கல்யாண் மார்க், உத்யோக் பவன், பிரகதி மைதானம், கான் மார்க்கெட், பிரகாம்பா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. டெல்லி புறநகர்களில் இருந்து போராட்டக்காரர்கள் வருவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், போராட்டக்கார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, ஆட்களை திரட்டுவது மற்றும் வதந்திகளை பரப்புவது போன்றவற்றில் ஈடுபடுவதாக கூறி மொபைல் சேவைகளும் நிறுத்தப்பட்டன. வோடபோன், ஏர்டெல் மொபைல் போன் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், மத்திய அரசின் உத்தரவுப்படி தற்காலிகமாக இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவை சரி செய்யப்படும் என்றும் அவை தெரிவித்துள்ளன.

READ MORE ABOUT :

More Delhi News

அதிகம் படித்தவை