அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்போரின் கணினிகள் வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக போலி எச்சரிக்கை செய்தியை அனுப்பி ஏராளமான பணத்தை ஏமாற்றிய நவீன கொள்ளைக் கும்பல்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளன.
"உங்கள் கணினியை வைரஸ் தாக்கியுள்ளது. உதவிக்கு எங்கள் கட்டணமில்லாத எண்ணை அழைக்கவும்" (Your computer has been infected with a virus. Call our toll-free number immediately for help) என்ற செய்தி திடீரென கணினி திரையில் தோன்றும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் மற்றும் சிமன்டெக் போன்ற நிறுவனங்களிடமிருந்து வருவது போன்று இந்த போலி செய்திகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். சிலருக்கு தொலைபேசி வழியாகவும் இதுபோன்ற போலி எச்சரிக்கை அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. கணினிகளை சரி செய்வதற்கு 99 முதல் 1,000 டாலர் வரை இந்த போலிகள் வசூலித்துள்ளனர்.
பலர் இதுபோன்ற செய்திகளை புறக்கணித்தாலும், ஐவரில் ஒருவர் இந்த போலி தொழில்நுட்ப உதவி கும்பலோடு தொடர்பு கொள்கின்றனர் என்றும், ஆறு விழுக்காட்டினர், தங்கள் கணினியில் இல்லாத பிரச்னையை சரி செய்வதற்கு இவர்களுக்குக் கட்டணம் செலுத்தியுள்ளனர் என்பதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
பெரும்பான்மையான கணினிகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி வரும் நிலையில், மாதந்தோறும் இதுபோன்ற முறைகேடுகளை குறித்து ஏறக்குறைய 11,000 புகார்கள் அந்நிறுவனத்திற்கு வருகின்றன என கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கண்காணிப்பின்படி தினந்தோறும் 1,50,000 விளம்பரங்கள் பல்வேறு கணினிகளில் தோன்றுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மற்றும் ஓஹியோ ஆகிய பகுதிகளில் சில போலி தொழில்நுட்ப உதவி மையங்கள் இயங்கி வந்தாலும் அவற்றின் மூலம் இந்தியாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு வாடிக்கையாளர் சேவை மையங்கள் இந்தியாவில் இயங்கி வருவதால், அந்த தொழில்நுட்பங்களை போலிகள் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் டெல்லியின் புறநகர் பகுதியில் பதினாறு போலி மையங்களை காவல்துறையினர் ஆய்வு செய்து முப்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். கடந்த மாதம் இதேபோன்று பத்து மையங்களில் இருபத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் கௌதம புத்தா நகர் பகுதியில் 50 காவல்துறை அதிகாரிகள் எட்டு மையங்களை ஆய்வு செய்ததாகவும் காவல்துறை சார்பாக கூறப்படுகிறது.
தற்போது ஆங்கிலம் பேசும் மக்களிடையே திருடி வரும் இக்கும்பல் வரும் நாட்களில் ஆங்கிலம் பேசாத மக்களிடமும் தங்கள் வித்தையை காண்பிக்கக் கூடும் என்பதால், ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகளோடு இணைந்து இதை தடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயற்சி எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.