கொரோனா பெருந்தொற்று காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவு பொருள்கள், தாவரங்களை பற்றி அதிக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்தக் காரணத்தால் கவனத்தை ஈர்த்துள்ள தாவரங்களுள் சீந்தில் கொடிக்கு முக்கிய இடம் உண்டு. சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது.
சீந்திலின் மருத்துவ குணங்களால் நீண்டகாலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு சீந்தில் உதவுகிறது.
வாழ்வியல் முறையும் நீரிழிவும்
பரபரப்பான வாழ்க்கை முறையால் நமக்கு உறக்கம் கெடுகிறது. சரியான நேரத்தில் சாப்பிட தவறுகிறோம்; உடல் உழைப்பு குறைகிறது. இதன் காரணமாக, இரத்தத்தில் உள்ள சர்க்கரை போதுமான அளவில் செலவழிகிறதில்லை. நாளடைவில் இது நீரிழிவு பாதிப்புக்குக் காரணமாகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பேணி வந்தால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாது. சீந்தில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
நீரிழிவை தடுக்கும் சீந்தில்
சீந்தில் செரிமானத்தை தூண்டுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. உடலின் கிரகிக்கும் ஆற்றலையும் அதிகரிக்கிறது. இந்த இரு செயல்பாடுகளையும் நம் உடல் சரியாக செய்யும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக பேணப்படுகிறது. இதன் காரணமாக, காயங்கள் ஆறுகின்றன; சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுவதில்லை.
சாப்பிடுவது எப்படி?
சீந்திலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமானம் அதிகமாகும். சீந்தில் இலையை சாறு எடுத்து குடிக்கலாம் அல்லது சிறு உருண்டையாக உருட்டி சாப்பிடலாம்; சீந்தில் இலையை பொடியாக்கி வெதுவெதுப்பான நீருடன் குடிக்கலாம்.