இதயத்திற்கு ஆரோக்கியம்... இரத்த அழுத்தத்திற்குக் கட்டுப்பாடு... நீரிழிவை தவிர்க்கிறது... அது எது தெரியுமா?

by SAM ASIR, Feb 15, 2021, 20:28 PM IST

ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியவை. ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. ஆளி விதைகள் மத்திய கிழக்கு நாடுகளில் பண்டை காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வருபவை. ஆளி விதைகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரிய வருவதற்கு முன்பு அவை ஜவுளி தொழிலில் பயன்படுத்தப்பட்டன. ஆளி விதைகளில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் திறன் பெற்றுள்ளன. சிலர், உடல் ஆரோக்கியத்தை பெருக்கக்கூடிய உணவாக இதை பரிந்துரைக்கின்றனர். இவை செரிமானத்தை தூண்டக்கூடியவை; இதய நோய் வரும் ஆபத்தை குறைக்கக்கூடியவை; இன்சுலின் போதாமையால் ஏற்படும் இரண்டாம் வகை நீரிழிவு வராமல் தடுக்கக்கூடிறவை.

ஆளி விதையிலுள்ள ஊட்டச்சத்துகள்
ஏனைய கொட்டை (நட்ஸ்) வகைகளுடன் ஒப்பிடும்போது ஆளி விதைகளில் கலோரி (எரிசக்தி) அதிகம். ஆனால், இவற்றில் ஊட்டச்சத்துகளும் அதிகம். 100 கிராம் ஆளி விதைகளில் 534 கலோரி ஆற்றல் உள்ளது. ஒரு தேக்கரண்டியவு ஆளி விதைகளில் ஏறக்குறைய 55 கலோரி உள்ளது. 10 கிராம் எடைக்கு ஆளி விதைகளை எடுத்தால் அதில் 7 சதவீதம் நீர், 1.9 கிராம் புரதம் (புரோட்டீன்). 3 கிராம் கார்போஹைடிரேடு, 0.2 கிராம் சர்க்கரை, 2.8 கிராம் நார்ச்சத்து, 4.3 கிராம் கொழுப்பு இருக்கும். ஆளி விதைகளில் சோயாபீன்ஸில் இருப்பதை காட்டில் அதிக தரமுள்ள அமினோ அமிலங்கள் உள்ளன. தையமின், செம்பு (காப்பர்), மாலிப்டினம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஃபெருலிக் அமிலம், சையோஜெனிக் கிளைகோசைடுகள், பைடோஸ்ட்ரோல்கள் மற்றும் லிக்னன் போன்ற உடல் நலத்திற்கு அத்தியாவசியமான தாதுகளும் கூட்டுப்பொருள்களும் ஆளி விதைகளில் அடங்கியுள்ளன.

உடல் எடை
உடல் எடையை குறைப்பதில் ஆளி விதைகள் நன்கு உதவுகின்றன. ஆளி விதைகளில் மியூஸிலாஜ் என்னும் நார்ச்சத்து உள்ளது. அது பசியை அடக்கக்கூடியது. தேவையற்ற நேரங்களில் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்கக்கூடிய அளவு வயிற்றை திருப்தியாக உணரச் செய்யும் இயல்பு கொண்டது. அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்டவர்களின் எடையை குறைக்கும் பண்பு ஆளி விதைக்கு உள்ளது என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

கொலஸ்ட்ரால்
கெட்ட கொலஸ்ட்ரால் என்று அறியப்படும் எல்டிஎல் அளவை உடலில் குறைப்பதற்கு ஆளி விதைகள் துணை செய்கின்றன. தினமும் ஆளி விதைகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு 6 சதவீதத்திலிருந்து 11 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவை ஈரலில் உள்ள கொலஸ்ட்ராலை செரிமான மண்டலம் வழியாக வெளியேற்றுகின்றன.

இதய ஆரோக்கியம்
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஏஎல்ஏ எனப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் ஆளி விதைகளில் உள்ளது. இது இதய நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இந்த ஆரோக்கியமான கொழுப்பு தமனிகளில் அழற்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனால் தமனிகளில் ஏற்படும் பாதிப்புகளால் வரும் பக்கவாதம், மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்று ஆபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.

இரத்த அழுத்தம்
ஆளி விதைகளை சாப்பிடுவதால் இயற்கையான முறையில் இரத்த அழுத்தம் குறையும். 12 வாரங்களுக்கு தினமும் ஆளி விதைகளை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும். இவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அவை இரத்த நாள சுவர்களில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது.

நீரிழிவு
ஆளி விதைகளில் இருக்கக்கூடிய லிக்னன் என்னும் பொருள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இன்சுலின் குறைவால் வரும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் 10 முதல் 20 கிராம் ஆளிவிதை பொடியை 1 முதல் 2 மாதங்களுக்கு உட்கொண்டால் சர்க்கரையின் அளவு 19.7 சதவீதம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மஞ்சள் மற்றும் பழுப்பு (பிரௌன்) நிறங்களில் ஆளி விதைகள் உள்ளன. இரண்டுமே சம அளவு சத்து கொண்டவை. சாலட் மற்றும் ஸ்மூத்திகளில் இவற்றை சேர்த்து உட்கொள்ளலாம். ஆளி விதைகளை அரைத்து உட்கொள்வது நல்லது.

ஏனெனில் அவற்றின் வெளியுறை கடினமாக இருப்பதால் முழுமையாக விழுங்கினால் அவை செரிக்காமல் வெளியேறக்கூடும். குறைவான இரத்த அழுத்தம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ஹார்மோன் பிரச்னைகள், இரத்தப்போக்கு உள்ளவர்கள் இவற்றை கவனமாக சாப்பிடவேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்க்கும் இவை ஏற்றவை. ஆனால், ஆளி விதை துணையுணவுகளை அவர்கள் தவிர்க்கவேண்டும். இவற்றை உட்கொள்வதால் உடல்நலத்தில் பிரச்னை வந்தால், மருத்துவ ஆலோசனையோடு சாப்பிடுவது நல்லது.

You'r reading இதயத்திற்கு ஆரோக்கியம்... இரத்த அழுத்தத்திற்குக் கட்டுப்பாடு... நீரிழிவை தவிர்க்கிறது... அது எது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை