உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல். இதில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன.
காய்ச்சல் வந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
- காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.
- தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.
- காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.
- காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.
- காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.
- காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.
- மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிக முக்கியம்.
- நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப் பருகுவது நல்லதல்ல.