`மாரடைப்பில் இறந்துவிட்டாள்' - மகளை ஆணவக் கொலை செய்தாரா ஆந்திர நபர்?

ஆந்திரா மாநிலத்தில் மீண்டும் ஆணவக் கொலை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாலூர் வட்டம், கொட்டாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கா ரெட்டி. இவரின் மகள் வைஷ்ணவி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். 20 வயதாகும் வைஷ்ணவி அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நண்பரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. அவர் மாற்று சாதியை சேர்ந்தவர். இவர்களின் காதலை அறிந்த வைஷ்ணவியின் தந்தை வெங்கா ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டுள்ளார். அவரின் எதிர்ப்பை கண்டுகொள்ளாத வைஷ்ணவி தன் காதலருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

மேலும் தன் வீட்டை விட்டு வெளியேறி காதலுடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற வெங்கா ரெட்டி மகளை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு இழுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் காலை வைஷ்ணவி மாரடைப்பில் இறந்துவிட்டதாக தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் வெங்கா ரெட்டி. அவரின் இறப்பில் சந்தேகம் வர போலீஸார் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். உடனடியாக வைஷ்ணவியின் உடலை கைப்பற்றிய போலீஸார் சோதனை நடத்தினர். அதில், கழுத்தில் பலத்த காயமும், உடலில் காயமும் இருப்பதைக் கண்டுபிடித்தனர். தற்போது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர். மேலும் வெங்கா ரெட்டியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்