ப்ரியங்களுடன் உன்...

'உயிரைக் கொடுக்குறவங்களை தான் லவ் பண்ணனும்னா, ஆட்டையும் கோழியையும்தான் லவ் பண்ணனும்' - ஃபேஸ்புக்கில் இந்தப் பதிவை பார்த்ததும் சிரிப்பு வந்தது.
தெய்வீக காதல், அமரத்துவ காதல், உயிருக்குயிரான காதல் - இப்போது யதார்த்த காதலாகி விட்டது.
சென்னையில் மின்ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த நண்பர்களுள் ஒருவர், "நேற்று ரெண்டு பொண்ணுங்க பேசிக்கொண்டு வந்தார்கள். நானெல்லாம் நல்ல கார்டு இருக்கிறவனா பாத்துதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரு பொண்ணு சொல்லுது... அடுத்த பொண்ணு நானும் அப்படியே பண்ணிக்கிறேன்... அப்போ இஷ்டத்துக்கு செலவழிக்கலாம்னு சொல்லுது," என்று கூறியது காதில் விழுந்தது. 
 
காதல் - காதலிப்பவர்களின் பார்வையில் ஒருவிதமாகவும், பெற்றோர் பார்வையில் ஒருவிதமாகவும், சமுதாயத்தின் கண்களினால் வேறொரு விதமாகவும் பார்க்கப்படுகிறது.
ஒன்றாக படிப்பவர்கள்... ஒரே தெருவில் வசிப்பவர்கள்... ஒரே பேருந்தில் பயணிப்பவர்கள்... தங்கையின் தோழிகள்... தோழியின் அண்ணன்கள் என்று பெரும்பாலும் 'காதலர்கள்' டெம்ப்ளேட் அமைகிறது. இதுவரைக்கும் இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. சமூக வலைத்தளங்கள் அறிமுகமானபின், முகநூல் வழி காதலர்கள் என்று ஒரு பிரிவு புதிதாக உருவாகியுள்ளது.
 
எப்படி இருந்தாலும் காதல் இனிமையானதுதான்! ஏனெனில், அது இயற்கையானது. பருவ வயதின் ஹார்மோன் செயல்பாட்டுக்கு காதல் என்ற அழகிய பெயரை நாம் வைத்துள்ளோம். 
உங்கள் காதல் எப்படி உருவானது என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள். மோதலில்தான் காதல் பிறக்கும் என்று சொல்வார்கள். பள்ளியில், கல்லூரியில் அந்தப் பையனுக்கும் அல்லது பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட சிறுமோதல், இனிமையான காதலாக மாறியதா?
அலுவலகத்தில் வேலையில் கிடந்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது உதவியவர், வெளியூரில் வேலைக்கு வந்து திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, சரியான சாப்பாடு இல்லாமல் தவித்தபோது உதவிய அலுவலக தோழி என்று காதல் ஏதாவது ஒருவிதத்தில் பூத்திருக்கும்.
பிப்ரவரி வந்து விட்டாலே 'வாலன்டைன்ஸ் டே'க்கான உற்சாக மனநிலையும் வந்து விடும். இதோ, 14ம் தேதியும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
காதலர்கள், காதலித்து வெற்றிகரமாக மணம் செய்து கொண்டவர்கள் கொண்டாடுவதை காட்டிலும், புதிதாக 'ஐ லவ் யூ' சொல்ல காத்திருப்பவர்களுக்கே 'வாலன்டைன்ஸ் டே' பெரிய எதிர்பார்ப்பை தருகிறது.
'ப்ரியங்களுடன் உன்' என்று உங்கள் பெயரை எழுதி என்ன வெகுமதியை உங்கள் மனங்கவர்ந்தவருக்கு தரப் போகிறீர்கள்?
மனிதர் உணர்ந்து கொள்ள அது மனித காதல் அல்ல என்று வசனம் பேசி விட முடியாது. ஏனென்றால், இந்த சமுதாயமே மனிதர்களால் ஆனதுதான். காதலிக்கும்போதும், காதலில் இணைந்த பிறகும் இந்த சமுதாயத்தில்தான் வாழப் போகிறோம். காதலுக்கு கண்ணில்லை என்று கண்களை மூடிக்கொண்டு அல்ல; கொஞ்சம் மூளையையும் திறந்து முடிவெடுங்கள்...
அப்போது, உங்கள் ப்ரியங்கள் உண்மையில் வெற்றி பெறும்!
காதலர் தின வாழ்த்துகள்!
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News