தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
தி இந்து நாளேடு ஏற்பாடு செய்த விழாவுக்கு பெங்களூரு வருகை தந்தார் மகிந்த ராஜபக்சே. அவரது இந்திய வருகைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களையும் மகிந்த ராஜபக்சே சந்தித்தார். அப்போது இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் படுகொலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளித்த ராஜபக்சே, பாலச்சந்திரனும் ஒரு ஆயுதம் தாங்கிய போராளியே. அவருக்கு பிரபாகரன் 5 மெய்ப் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்திருந்தார்.
இசைப்பிரியா ஊடகவியலாளர் அல்ல. அவரும் போராளிதான். இசைப்பிரியா என்பது புலிகள் இயக்கம் அவருக்கு சூட்டிய பெயர். நாங்கள் அப்பாவிகளை கொலை செய்யவில்லை.
எங்களது ராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சில நாடுகள் அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றன. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.