விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று முற்பகல் 11.45 -12.00 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாடப் போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்திருக்கும் நிலையில், பிரதமரின் இந்த ட்விட்டர் அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடந்தது. இதனால், பிரதமர் எதைக் குறித்துப் பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், பிரதமரின் உரை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது, உரையாற்றிய மோடி, ‘விண்வெளியில் செயற்கைக்கோளைத் தாங்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ என்ற கடினமான சோதனை வெற்றி பெற்றது. இதனால், விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4-வது நாடாக இந்தியா சாதனை படைத்திருப்பது பெருமிதமாக உள்ளது. இந்த சோதனையானது, இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்கு தானே தவிரப் பிற நாடுகளை அச்சுறுத்துவதற்காக இல்லை என்று கூறிய மோடி, முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெறும் 3 நிமிடங்களில் விண்வெளியில் இருந்த செயற்கைக்கோள் தாங்கி அழிக்கப்பட்டது. இந்த முயற்சியால் விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்திருக்கிறது எனத் தெரிவித்தார்.