நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி இணையதளத்தில் பதிவறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட் தேர்வு) நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதேபோல் எதிர்வரும் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வை மே 5ம் தேதி நடத்துகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டது. இதற்கிடையே 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 7ம் தேதி நீட்டிக்கப்பட்டது.
நாடு முழுவதும் நீட் தேர்வில் பங்கேற்பதற்காக 15.19 லட்சம் விண்ணப்பம் செய்து உள்ளனர். அதில், தமிழக மாணவர்கள் மட்டும் 1.40 லட்சம் பேர். நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் வரும் 15ம் தேதி முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து பெற்று கொள்ளலாம் என (என்.டி.ஏ.) தகவல் தெரிவித்துள்ளது.