சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரஸல் 6 ரன்களில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்த போது, ஹர்பஜன் அதை கோட்டை விட்டார். இதனால், ரஸல் தனது ருத்ர தாண்டவத்தை ஆடி அரைசதம் அடித்தார்.
ஆனாலும், 108 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிதானமாக விளையாடி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக டூப்ளஸ்சி 43 ரன்கள் அடித்தார்.
3 விக்கெட்டுகளை எடுத்த தீபக் சாஹர் ஆட்டநாயகனாக தேர்வானார். சென்னையில் போட்டி நடந்த நிலையில், தோனி பேட்டிங் செய்யாமலயே சென்னை அணி வெற்றி பெற்றதால், ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி சப்பென்று முடிந்தது போலவே இருந்தது.
ரஸல் கேட்சை விட்டாலும், ஹர்பஜன் சிங் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளையும் இரண்டு பெரிய விக்கெட்களின் கேட்ச்களையும் பிடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஆட்டம் முடிந்த உடனே தனது வெற்றியை ட்விட்டரில் வழக்கம் போல் தமிழில் போஸ்ட் போட்டு ஹர்பஜன் கொண்டாடியுள்ளார்.
”அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா @chennaiiplட்ட வாங்காத ஊமக்குத்தா.மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவெச்சுருச்சா #தல வேட்டு #CSKvKKR அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி #CSK மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா,இப்ப சொல்லு நாங்க கெத்தா” என பதிவிட்டு, கொல்கத்தா அணியை செமையாக நக்கலடித்துள்ளார்.