தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக வாக்காளர்களின் விரலில் அடையளாமாக வைக்கப்படும் அழியாத மை ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கு இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவற்றுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தலில் கள்ள ஒட்டுக்களை போடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், வாக்களித்தற்கு அடையாளமாக வாக்காளரின் விரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. இந்த மையை அவ்வளவு எளிதாக உடனே அழித்து விட முடியாது என்பதுதான் அதன் சிறப்பு. இந்த மையின் விலை சாதரண மையை காட்டிலும் அதிகமாகும். தமிழகத்தில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு தேர்தல் ஆணையம் அழியாத மை வாங்கியுள்ளது.
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் உள்ள வாக்குசாவடிகளில், வாக்கு செலுத்தியதை உறுதி செய்வதற்கு, வாக்காளர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்கு ஒரு வாக்குசாவடிக்கு 10 மி.லி. அளவு கொண்ட 2 மை பாட்டில்கள் வழங்கப்படும். இதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பெயிண்ட் அண்டு வார்னிஷ் நிறுவனத்திடம் இருந்து 1.74 லட்சம் மை பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2.47 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.