சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 23வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சென்னை அணியில் பவுலர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆரம்பம் முதலே சென்னை அணியின் பவுலர்கள் கொல்கத்தா அணியை திணறடித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளாக குவித்து பெவிலியன் திரும்பச் செய்தனர்.
துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 5 பந்துகளை எதிர்கொண்டும் ஒரு ரன் கூட எடுக்காமல், சாஹர் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
சுனில் நரைன் 5 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் சாஹரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ராபின் உத்தப்பா 9 ரன்களிலும், நிதிஷ் ராணா டக் அவுட்டும் ஆகினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓரளவு தாக்குப்பிடித்து 21 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில், இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்கிடம் ஃபார்வர்ட் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்த்த அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் துவக்கத்திலேயே இம்ரான் தாஹிர் பந்துவீச்சில், உயர அடித்து ஹர்பஜன் கைக்கு பழமான கேட்ச் கொடுத்தார். ஆனால், அதை ஹர்பஜன் சிங் கோட்டை விடவே, மீண்டும் ரஸ்ஸல் தனது பலம் வாய்ந்த கோட்டையை கட்ட ஆரம்பித்து விட்டார்.
50 ரன்களுக்கெல்லாம் அந்த அணியில் உள்ள வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க ரஸ்ஸல் மட்டும் அதற்கு மாறாக சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி 50 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார்.
ரஸ்ஸல் கேட்சை ஹர்பஜன் சிங் கோட்டை விடாமல் இருந்திருந்தால், கொல்கத்தா அணி 108 ரன்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும்.
ஆனபோதும், 108 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்தும் சென்னை அணி விக்கெட்டுகளை பறிகொடுக்காமல், வெற்றி வாகை சூடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.