10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதன்பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயன்றனர். இதில் கலவரம் வெடித்தது. பின்னர் கனதுர்கா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். தற்போது கோயில் நடை சாத்தப்பட்டதால் தற்போது பிரச்னை ஓய்ந்துள்ளது. இதற்கிடையே சபரிமலை பிரச்னை வெடித்தபோது, மசூதிகளிலும் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பு கூறி வந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாஷ்மீஜ் ஜபூர் அஹமது பீர்ஷேட் மற்றும் ஜபூர் அஹமது பீர்ஷேட் என்ற இஸ்லாமியத் தம்பதி, உச்ச நீதிமன்றத்தில் இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், ``பெண்கள் மசூதிக்குச் செல்வதைத் தடுப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது. இவ்வாறு தடுப்பதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 21, 25 மற்றும் 29-ன் விதிமுறைகளை மீறுவதாகும். மேலும், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லை. பிறகு ஏன் அவர்களை மட்டும் மசூதிக்குள் செல்ல தடை விதிக்க வேண்டும். எனவே, பெண்களும் மசூதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுவின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.