கேரள மாநிலத்தில் நேற்று நடந்த 20 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 74 சதவீதம் வாக்குகளே பதிவான நிலையில் அதைக் காட்டிலும் இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. தேர்தல் என்பதால் நேற்று முழுவதும் கேரளா பரபரப்பாக காணப்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியிலும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தன. வாக்களிக்க சென்ற பெண் ஒருவரின் குழந்தையை காவலர் வைத்திருந்தார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. `இவர் தான் உண்மையான சௌகிதார்' நெட்டிசன்கள் அந்த காவலரை வைரலாக்கினர்.
இதேபோல் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. நேற்று வாக்குப்பதிவை ஒட்டி ஒரு காரில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடியை இளைஞர்கள் ஒரே காரில் கொண்டு செல்லும் புகைப்படம் வலைதளங்களில் உலா வந்தது. வாக்குப் பதிவு முடிந்த பின் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் நண்பர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஒரே காரில் தங்கள் கட்சி கொடியுடன் செல்கின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ``இது கேரளாவில் மட்டுமே நடக்கும். நட்பு வேறு, அரசியல் வேறு என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்" என்பது போன்று நெட்டிசன்களை கமெண்ட்டுகளை தட்டி பாராட்டி வருகின்றனர்.