ஒடிசாவில் ருத்ர தாண்டவம் ஆடிய கோரப் புயல் ஃபானி, தன் பாதையை மே.வங்கம் நோக்கி திருப்பியுள்ளது. இன்று இரவு கொல்கத்தாவை சூறையாடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மே.வங்கத்தில் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளளது. மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்துவிட்டு புயல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்.
வங்கக் கடலில் உருவாகி சென்னையைத் தாக்கும் என எதிர் பார்க்கப்பட்ட ஃபானி புயல் திசை மாறி ஒரிசா நோக்கி சென்றது. வரலாறு காணாத அதிதீவிர புயலாக மாறிய ஃபானி புயல் இன்று காலை ஒடிசாவை சூறையாடியது. மணிக்கு 245 கி.மீ வேகத்தில் சுழன்றடித்து ஒடிசாவின் பூரி அருகே கரையைக் கடந்தது. அப்போது வீசிய சூறைக்காற்றால் மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்தன. புயலுடன் கொட்டித்தீர்த்த மழையால் கோவில் நகரமான பூரி வெள்ளக்காடாகி தண்ணீரில் மிதக்கிறது. முன் எச்சரிக்கையாக பேரிடர் மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அப்புறப் படுத்தப்பட்டதால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், ஒடிசாவில் பொருட்சேதம் பெரிய அளவில் ஏற்பட்டுள்லாதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் ஒடிசாவில் கரை கடந்த பின் தன் பாதையை வடக்காக் திருப்பி மே.வங்கம் நோக்கி சுழன்றடித்து செல்லும் ஃபானி புயல் இன்று இரவு 8 மணியளவில் கொல்கத்தாவை சூறையாடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மே.வங்க மாநிலத்தில் உஷார் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 3 மணி முதல் நாளை காலை வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் தாண்டவமாடியது போல் கொல்கத்தாவிலும் மணிக்கு 200 கி.மீக்கும் மேல் புயல் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தீவிர தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. அதி தீவிர ஃபானி புயலின் கோரத் தாண்டவத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னின்று துரிதப்படுத்தி வருகிறார் மம்தா .