‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மத்திய அரசுப் பணிகளில் சேரும் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில், தெற்கு ரயில்வேயில் 1,765 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் கூட 1,600 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது வட மாநிலத்தவர்கள். அதில் வெறும் 400 பேர் மட்டுமே தமிழர்கள். வருமான வரித்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீதங்கள் கூட தமிழர்கள் பணி அமர்த்த படவில்லை. தபால், தணிக்கை, சுங்கம், பாஸ்போர்ட் உள்ளிட்ட மத்திய அரசின் பிற துறைகளிலும் இதே நிலைதான்.
இதனையடுத்து, மத்திய அரசின் செயலை கண்டித்து, திருச்சி பொன்மலை பணிமனை முன் இன்று போராட்டம் நடைபெறும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் தெரிவித்திருந்தார். அதன்படி, திருச்சி பொன்மலை ரயில் நிலையம் முன்பு இன்று தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் #TamilNaduJobsForTamils என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஸ்டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘’இன்று மே 3, காலை 8 மணி முதல் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைந்து வலிமை சேர்க்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்’’ என பதிவிட்டுள்ளார்.