பிரதமர் மோடி 2வது முறை பதவியேற்பதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 தொகுதிகளில் வென்று, மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த முறை மோடி அலை வீசிய போது பெற்றதை விட மிக அதிகமாக இத்தனை இடங்களை பா.ஜ.க. எப்படி கைப்பற்றியது என்று எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரங்களில் பா.ஜ.க. முறைகேடு செய்துள்ளது என்று பரவலாக பேசப்பட்டாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயுள்ளன.
ஆனால், நாடு முழுக்க காவி கொடி பறக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பா.ஜ.க., அடுத்த கட்டமாக எதிர்க்கட்சிகள் ஆளும்மாநிலங்களில் தனது வேலையை துவக்கி விட்டது. கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ம.ஜ.த. வெறும் 37 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரஸ் 80 எம்.எல்.ஏ.க்களையும் கொண்டிருக்க, பா.ஜ.க. 107 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கிறது.
எனவே, பா.ஜ.க.வுக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கூடுதலாக கிடைத்தால் போதும் என்ற நிலையில், அங்கு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணியில் பா.ஜ.க.வினர் இறங்கியள்ளனர். ரமேஷ் ஜரிகோலி என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தயாராக உள்ளதாகவும், அவர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவர்களை அழைத்து சென்ற கோவாவில் தங்க வைப்பதற்காக கோவா நட்சத்திர ஓட்டலில் 30 அறைகள் புக் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
கர்நாடகாவைப் போல், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க.வினர் தங்கள் வேலையை துவக்கினர். அங்கு இது வரை திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சுப்ரான்ஷூ ராய், துஷார் காந்தி உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 56 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். ‘இது முதல் கட்டம்தான். தேர்தலைப் போல் ஏழு கட்டங்களில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடக்கும்’ என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் கைலாஷ் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் 54 பேரின் குடும்பத்தினரை மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளனர். ஆனால், அரசியல் கொலை ஒன்றுமே நடக்கவில்லை என்றும், மோடி பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்ததாக, குஜராத்திலும் பா.ஜ.க. தனது வேலையை துவக்கி விட்டது. இங்கு முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. இம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா, தற்போது காந்திநகர் மக்களவை தொகுதியில் வென்றுள்ளார். அதே போல், இங்கிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், உ.பி. மாநிலம் அமேதியில் வென்றுள்ளார். இதனால், குஜராத்தில் 2 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகின்றன.
தற்போது ஆளும் பா.ஜ.க.வில் 103 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசில் 71 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனால், காங்கிரஸ் ஒரு ராஜ்யசபா இடத்தை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதை தடுத்து 2 இடங்களையும் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. ஜம்காம்பலியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்ரம் மாடம், தியோதர் தொகுதியில் சிவபாய் புரியா ஆகியோர் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் பா.ஜ.க.வுக்கு மாறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கடந்த முறை ராஜ்யசபா தேர்தல் நடந்த போது. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை காங்கிரஸ் நிறுத்தியிருந்தது. அப்போது அவரை தோற்கடிப்பதற்காக அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. இழுத்தது. இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கர்நாடகாவுக்கு அழைத்து செல்லப்பட்டு, ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட சம்பவம் எல்லாம் நடந்தது. அந்த முறை எப்படியோ அகமது படேல் வென்று விட்டார்.