மத்தியப் பிரதேசத்தில் வயது முதிரந்த மாடுகளை பாதுகாக்க 300 குளுகுளு கோசாலைகளை அமைக்க காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, வெளிநாட்டு நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு வெளிநாட்டு நிறுவனத்தின் மூலம் 300 நவீன கோசாலைகள் அமைக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து, மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் லக்கான்சிங் யாதவ் கூறியதாவது:
வயது முதிர்ந்து கைவிடப்பட்ட மாடுகளை பாதுகாக்க 300 ‘ஸ்மார்ட் கவுசாலா’ அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி. வசதியுடன் கூடிய இந்த கோசாலைகளை அமைக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
இந்த நவீன கோசாலைகளை கட்டுவதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் உதவியும் கேட்கப்படும். ஆண்டுக்கு 60 நவீன கோசாலைகள் என்ற விகிதத்தில் ஐந்தாண்டுகளில் 300 கோசாலைகள் அமைக்கப்படும். இது தவிர, மாநிலம் முழுவதும் ஆயிரம் சிறிய கோசாலைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் லக்கான்சிங் யாதவ் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலின் போது, நவீன கோசாலைகள் அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.