அம்மா இருந்திருந்தால்... அமைச்சர் இப்படி பேசுவாரா?

Badminton court turns minister sons personal fief, endgame for people

by எஸ். எம். கணபதி, Jun 16, 2019, 09:03 AM IST

சென்னையில் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் மகனுக்காக ஒதுக்கி வைத்து, சும்மாவே போட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு சாதாரண மக்களுக்கு விளையாட அனுமதிக்காதது அப்பகுதி மக்களுக்கு கோபத்தை தந்துள்ளது.

சென்னை மந்தைவெளிப் பகுதியில் மாநகராட்சி மைதானம் உள்ளது. இங்கு 3 பேட்மின்டன் கோர்ட் உள்ளளன. தற்போது மைதானத்தை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. அந்த நிறுவனம், பேட்மின்டன் விளையாட்டுத்தளத்தை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுகிறார்கள். அப்பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்கள் அவற்றை பயன்படுத்தி விளையாடி வந்தனர்.


இந்நிலையில், ஒரு விளையாட்டுத்தளத்தை சும்மாவே போட்டு வைத்து விட்டிருக்கின்றனர். இது பற்றி மக்கள் போய் கேட்டதற்கு, ‘‘இது ஏற்கனவே 3 பேர் புக் பண்ணி விட்டார்கள்’’ என்று பதில் கொடுத்துள்ளார்கள். மேலும், நாகராஜன் குடும்பத்தினர், சிவசங்கரி குடும்பத்தினர் மற்றும் தரணி குடும்பத்தினர் என்று போர்டில் எழுதியும் போட்டிருக்கிறார்கள்.


இது பற்றி மக்கள் விசாரித்த போது, தரணி அமைச்சர் தங்கமணியின் மகன் என்று தெரியவந்தது. தரணி மற்றும் அவரது நண்பர்கள் காலையிலும், அவரது சகோதரி குடும்பத்தினர் மாலையிலும் அந்த பேட்மின்டன் கோர்ட்டை பயன்படுத்துகிறார்களாம். பாதி நாட்கள் அந்த கோர்ட் காலியாகவே இருக்கிறதாம். ஆனாலும், அதை மக்கள் பயன்பாட்டுக்கு தருவதில்லையாம். இது பற்றி, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


அந்த செய்தியிலேயே அமைச்சர் தங்கமணியிடம் விளக்கம் கேட்டு அதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அமைச்சர் தங்கமணி, ‘‘எனது மகன் ஆயிரம் ரூபாய் கட்டி ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார். இதில் ஒன்றும் தவறில்லை’’ என்று பதிலளித்திருக்கிறார். ‘‘அந்த மைதானத்திற்குள்ளேயே மக்களை மாநகராட்சி அனுமதிப்பதில்லையே?’’ என்று கேட்கப்பட்டதற்கு மிகவும் கூலாக, ‘‘அதை மாநகராட்சியிடம் போய் கேளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.


இதன்பின், அந்த டைம்ஸ் நிருபர், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை தொடர்பு கொண்டு கேட்க, அவரோ இது பற்றி தலைமைப் பொறியாளர் காளிமுத்துவிடம் கேட்கச் சொல்லியிருக்கிறார். நிருபரும் காளிமுத்துவை தொடர்பு கொண்டார். பூங்காக்கள் மற்றும் மைதானங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அந்த அதிகாரியோ, ‘‘எனக்கு இது பற்றி தெரியாது, விசாரித்து விட்டு சொல்கிறேன்’’ என்று பதிலளித்துள்ளார். ஆனாலும், அந்த நிருபர் விடாமல் மாநகராட்சி விளையாட்டு அலுவலர் பி.எஸ்.சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். அவரும் மழுப்பலாக பதிலளித்து விட்டார்.


தமிழ்நாடு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி (பாதுகாத்தல் மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்படி, மாநகராட்சி விளையாட்டு மைதானங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிளப்களுக்கும்தான் ஒதுக்க வேண்டும். ஆனால், இங்கோ கேட்பாரில்லாததால் மந்திரி மகனுக்கு ஒதுக்கியுள்ளனர்.
இதனால், அதிருப்தி அடைந்த மக்கள், அடுத்த கட்டமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் இப்பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.


இது பற்றி அப்பகுதிவாசி ஒருவர் கூறுகையில், ‘‘அம்மா இருந்திருந்தால் அமைச்சர் தங்கமணி இப்படி பதில் பேசியிருப்பாரா? அமைச்சர்களின் குடும்பத்தினர் தனியார் ஓட்டல்களிலோ, கிளப்களிலோ விளையாட முடியாதா? மாநகராட்சி மைதானத்தை மடக்கிப் போடுவது அத்துமீறல் இல்லையா? இதுவே அம்மா இருந்திருந்தால் இந்த செய்தி வெளியான மறுநாளே மாநகராட்சி ஆணையரே வந்து இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க ஏற்பாடு செய்திருப்பார்.

ஆனால், இப்போது மக்களின் குரலை கேட்கும் அரசாங்கம் இல்லை’’ என்றார்.

ஒரு வழியாக முகம் மலர்ந்த மோடி, இம்ரான் கான்... கை குலுக்கி வாழ்த்தும் பரிமாறினர்

You'r reading அம்மா இருந்திருந்தால்... அமைச்சர் இப்படி பேசுவாரா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை