குஷ்பு தன் வீட்டின் அருகே கேட்பாரற்று கிடந்த சரக்கு வேனை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சென்னை போலீஸ் உடனடியாக கவனிக்கவும்’ என்று பதிவிட்டார். இதையடுத்து, அந்த வேனை அகற்றிய போக்குவரத்து போலீசார், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். கடந்த 22ம் தேதியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சாலையில் நின்ற ஒரு சரக்கு வேனை படம் பிடித்து போட்டிருந்தார். அதில், ‘‘இந்த கன்டெய்னர் எங்கள் தெரு முனையவில் கடந்த 10 நாட்களாக நிற்கிறது. யாரும் இதை பொருட்படுத்தவே இல்லை. இந்த வண்டியில் நம்பர் பிளேட் கூட இல்லாதது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சென்னை போலீசார் இதை உடனடியாக கவனிக்க வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார் அங்கு சென்று அந்த சரக்குவேனை அங்கிருந்து அகற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிலும் பதிவிட்டனர். அதில், ‘‘அந்த வாகனம் எடுத்து செல்லப்பட்டு, அபராதம் கட்டுவதற்கான சலான் அளிக்கப்பட்டு விட்டது. குற்றச் செயல்கள் குறித்து புகார் அளிப்பதற்கான எங்கள் ‘ஜிசிடிபி சிட்டிசன் சர்வீசஸ்’ ஆப்ஸ் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் மேடம்’’ என்று குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலிட்ட குஷ்பு, ‘‘டவுன்லோடு செய்து கொள்கிறேன். வேகமாக நடவடிக்கை எடுத்த உங்களுக்கு பாராட்டுகள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.